டெஹ்ரானில் இருந்து வெளியான தகவலின்படி, ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்க கடற்படை முற்றுகை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஏற்றி வந்த இந்திய தேசியக்கொடி கொண்ட 15 கப்பல்கள் அப்பகுதியில் தாமதமாகியுள்ளன.
அமெரிக்கா–ஈரான் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், ஈரானிய துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் முக்கிய கடல்வழித்தடத்திலும் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்ததால் பல கப்பல்களின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சிக்கியுள்ள இந்திய கப்பல்களில் கச்சா எண்ணெய், எல்பிஜி, திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு டேங்கர்கள் மட்டுமின்றி, கொள்கலன் கப்பல்கள், தூர்வாரும் கப்பல் மற்றும் ரசாயன டேங்கர் போன்றவையும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை தடையின்றி கடக்க இந்திய கடற்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்.
கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள், அப்பகுதியில் இருந்த 25 இந்திய கப்பல்களில் 10 கப்பல்கள் ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.





