டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கா கட்டுப்பாடு அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் ஒரு ‘கணித பார்முலா’ மூலம் வித்தியாசமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஈரான்–அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி முடிந்தது. இதன் பின்னர், ஹார்முஸ் வழியாக எந்த நாட்டு கப்பல்களும் செல்ல முடியாத வகையில் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அந்த வழியாக செல்லும் கப்பல்களிடம் இருந்து ஈரான் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக, ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமூக வலைதளத்தில் வெள்ளை மாளிகை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் விலைகளின் படத்தை பகிர்ந்து, “இப்போதைய விலைகளை ரசித்து அனுபவியுங்கள்; தடை வந்த பின் பழைய விலையை ஏக்கத்துடன் நினைக்க நேரிடும்” என குறிப்பிட்டார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையால் ஏற்படக்கூடிய விளைவுகளை ‘பார்முலா’ வடிவில் அவர் பதிவிட்டார். அதன்படி முதற்கட்டத்தில் எண்ணெய் விலை உயரும்; அடுத்த கட்டத்தில் சரக்கு போக்குவரத்து செலவு உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. காலிபாப் பொறியியல் பின்னணி கொண்டவர் என்பதால், இவ்வாறு ‘டெக்னிக்கல்’ முறையில் எச்சரிக்கை விடுத்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.





