சென்னை: த.வெ.க. தலைவர் மற்றும் நடிகர் விஜய், ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் ஆனதன் பின்னணியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மீண்டும் நடிக்க திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியை தொடங்கிய பின் விஜய் நடித்த ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என அவர் முன்னதாக அறிவித்திருந்தார். மலேஷியாவில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில், சென்சார் தொடர்பான பிரச்னையால் பொங்கலுக்கு திட்டமிட்ட வெளியீடு நடைபெறவில்லை.

இதையடுத்து வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றதால் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போனது. நீதிமன்ற உத்தரவின்படி படம் மறு தணிக்கைக்கும் சென்றது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதும், விஜய் தேர்தலில் போட்டியிடுவதும் காரணமாக, வெளியீட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானதால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஓடிடி தளத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் இணை தயாரிப்பாளராக இருப்பதால், விஜய் தரப்பும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தேர்தலுக்குப் பின் நஷ்டத்தை ஈடுசெய்யவும் கட்சியை நடத்தவும் தேவையான நிதி காரணமாக ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் ஈடுபடலாம் என்ற முடிவு குறித்து விஜய் வீட்டில் ஆலோசனை நடந்ததாக த.வெ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு வாரங்களில் அடுத்த படத்துக்கான பூஜை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.