தேசிய பட்டியலின ஆணையத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, சென்னை பல்கலை மீது எழுந்துள்ள புகார்களை விரிவாக விசாரிக்க தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பேராசிரியர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட பல கல்விசார் நடவடிக்கைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், பல்கலை வளாகத்தில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தேசிய பட்டியலின ஆணையத்துக்கு சென்றதையடுத்து, அதன் தலைவர் கிஷோர் மக்வானா பிப்ரவரி 9 அன்று பல்கலை வளாகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். யு.ஜி.சி. விதிகளின்படி தேர்வுக்குழுவில் எஸ்.சி./எஸ்.டி. பிரதிநிதிகள் இடம்பெறவில்லை என்ற புகாரும் இதில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம், பி.எச்டி. தொடர்பான நடைமுறைகள் மற்றும் பல்கலை ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகார்களும் விசாரணையில் இடம்பெற்றன.
உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், நான்கு புகார்களை தனித்தனியாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்படும் என்றும், விசாரணை அறிக்கை தேசிய பட்டியலின ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதன் பின்னர் தவறு கண்டறியப்பட்டால் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.





