சென்னை: லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகனும் லட்சிய ஜனநாயக கட்சித் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 2014ல் தி.மு.க. ரூ.500 கோடி நன்கொடை பெற்றதாக கூறி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், தே.ஜ. கூட்டணியில் லால்குடி தொகுதியில் போட்டியிடும் தனது தாய் லீமா ரோஸ் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்கும் என உதயநிதி பிரசாரத்தில் கூறியதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் லாட்டரி டிக்கெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பேசுவது லாட்டரி குறித்த புரிதல் இல்லாமையை காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.
மேலும், தற்போது லாட்டரி விற்பனையை எதிர்க்கும் தி.மு.க. அரசு தான் 2014ல் தங்களிடமிருந்து ரூ.500 கோடி நன்கொடை பெற்றதாகவும், அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். அந்த பணத்தை ஏன் பெற்றனர், எதற்காக செலவிட்டனர் என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினும் உதயநிதியும் விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனுடன், தி.மு.க. ஆட்சிக்கால நிதிநிலை குறித்து அவர் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதி வேட்பு மனுக்களில் உள்ள சொத்து விவரங்களையும் விமர்சித்தார்.





