தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது இல்லத்தின் பூஜை அறையில் பிரதமர் வழிபாடும் செய்தார். மேலும் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமருக்கு முருகப்பெருமான் புகைப்படத்தை பரிசாக வழங்கினார்.
இதையடுத்து தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் தமிழில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டார். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி, வெற்றி, நல்ல ஆரோக்கியம் நிறைய இருக்க பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.
இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை, புதிய தொடக்கங்களின் கொண்டாட்டம் என்றும், தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் தருணம் என்றும் குறிப்பிட்டார். தமிழின் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகிய வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விழா சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வளர்க்கட்டும் என்றும், மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் ஊக்கமடைந்து வெற்றியின் புதிய சிகரங்களை அடையவும், இயற்கையுடனான பிணைப்பை ஆழப்படுத்தவும் வேண்டுமெனவும் அவர் கூறினார்.





