மகளிருக்கு பார்லிமென்டிலும் சட்டசபைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பசுமை வழிச்சாலையை திறந்து வைத்த பிறகு பேசிய அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த தாமதமும் ஏற்படக்கூடாது என்றும், 2029ல் இது அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். சட்டம் நிறைவேற்றப்பட்டபோது அனைத்து கட்சிகளும் ஆதரித்ததை அவர் நினைவூட்டினார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுக்க ஏப்.16ஆம் தேதி பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது என்றும், பணியை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும், நாட்டின் சகோதரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்திற்கு கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
அதே உரையில், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், இது அரசியலமைப்பின் எதிர்பார்ப்பு என குறிப்பிட்டார்; உத்தரகாண்ட் ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டி எனவும் தெரிவித்தார். சமூக நீதியைப் பற்றியும் பேசிய அவர், ஹரித்வாரில் அடுத்தாண்டு நடைபெற உள்ள கும்பமேளாவை முன்னிட்டு வழிபாட்டு தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.





