தமிழக அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகை தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய கடிதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக, அந்த கடிதம் ஜனவரியில் வந்தும் இப்போது தான் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், அதிகாரிகள் தன்னிடம் சமீபத்தில் ஒரு கடிதத்தை காட்டியதாக கூறினார். அந்தக் கடிதம், தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக நெல் உற்பத்தி அதிகரித்து பிரச்னைகள் உருவாகின்றன எனக் குறிப்பிட்டு, ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துறையிலிருந்து அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், அந்தக் கடிதம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட ஆலோசனை கடிதம் என்றும், மாநில ஊக்கத்தொகை கொள்கைகள் தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைய வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கூறினார். ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசுகளின் அதிகாரம்; அதை யாரும் பறிக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.

ஸ்டாலின், தாம் கூறுவது உண்மை என்றால் கடிதத்தை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, நிர்மலா அந்தக் கடிதத்தை இணையத்தில் வெளியிட்டார். அது ஜனவரி 9 தேதியிட்டதாக இருப்பதால், மூன்று மாதங்கள் முதல்வருக்கு தெரியாமல் கடிதம் மறைக்கப்பட்டதா அல்லது தேர்தல் காரணமாக இப்போது விவகாரம் எழுப்பப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

கடிதத்தில் தெளிவாக உள்ளதையே தான் பேசியதாக ஸ்டாலின் வலியுறுத்தினார். மறுபுறம், பருப்பு, எண்ணெய்வித்து, சிறுதானிய உற்பத்தி போன்ற தேசிய இலக்குகளை முன்னிறுத்தி, ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக சர்ச்சையாக்குகிறார் என நிர்மலா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலாக, பெரும்பாலான மாநிலங்கள் நெல்லுக்கு ஊக்கத்தொகை தர வேண்டாம் என்ற கோரிக்கையை ஏற்றதாக கூறுவது உண்மையல்ல என்றும், கேரள முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்; ஆனால் கடிதம் தாமதமாக தன்னிடம் வந்தது குறித்து விளக்கம் அளிக்கவில்லை.