வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போரைக் குறித்து போப் லியோ தெரிவித்த கருத்துகளுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்ததால் இருதரப்புக்கும் இடையே வார்த்தைப் போர் உருவாகியுள்ளது.
போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திய போப் லியோ, ஈரானை ‘அழிப்போம்’ என்ற டிரம்ப் பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிரம்ப் சமூக வலைதள பதிவில் போப்பை தாக்கி, அவர் ‘தீவிர இடதுசாரிகளுக்கு’ ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அரசியல்வாதியாக அல்லாமல் மதத் தலைவராக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
அதே பதிவில், தாம் வெள்ளை மாளிகையில் இல்லாமல் இருந்திருந்தால் லியோ போப்பாக இருக்க மாட்டார் எனவும், அமெரிக்க உதவியை பெறுவதற்காகவே அமெரிக்காவில் பிறந்த ஒருவரை போப்பாக தேர்ந்தெடுத்தனர் எனவும் டிரம்ப் கூறியதாக செய்தி தெரிவிக்கிறது.
இதற்கு பதிலளித்த போப் லியோ, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான வாடிகனின் வேண்டுகோள்கள் நற்செய்தியில் வேரூன்றியவை என்றார். டிரம்ப் நிர்வாகத்தை கண்டு அஞ்சவில்லை என்றும், அவருடன் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கூறிய அவர், போர் எதிராக தொடர்ந்து சத்தமாக குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.
மேலும், அமைதியை மேம்படுத்துதல், அமைதி பேச்சை ஊக்குவித்தல், பிரச்னைகளுக்கு நியாயமான தீர்வுகளை காணுதல் மற்றும் நாடுகளுக்கிடையேயான பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன் என கூறினார். உலகம் முழுவதும் பலர் துன்பப்படுவதையும், அப்பாவிகள் கொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டி, இதைத் தடுக்க வேறு சிறந்த வழிகள் உள்ளன என்பதை யாராவது ஒருவர் சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.





