ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஓட்டு சேகரிக்க வந்த அமைச்சர் ராஜ கண்ணப்பனை சில கிராம மக்கள் முற்றுகையிட்டு, நிறைவேறாத கோரிக்கைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், ஒச்சத்தேவன் கோட்டை, கூரான்கோட்டை, வெள்ளம்பல் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி பக்கம் அதிகமாக வரவில்லை என்றும், முன்பு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.

கூரான்கோட்டை மற்றும் வெள்ளம்பல் பகுதிகளில் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஓட்டு கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிரசாரம் தொடர முடியாமல் அவர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

மதியம் 1 மணியளவில் ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து காரை முற்றுகையிட்டு கேள்விகள் எழுப்பினர். அந்த குழப்பத்தின் போது அமைச்சருடன் வந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இருந்த பெண்கள், குடிநீர் தட்டுப்பாடு, முறையான சாலை வசதி இல்லாமை, பேருந்து போக்குவரத்து இல்லாத நிலை, தெருவிளக்கு உள்ளிட்ட மின்சார வசதிகளில் குறைபாடு போன்ற பல பிரச்னைகள் நீண்ட காலமாக இருப்பதாக கூறி, அவை தீர்க்கப்படாமல் மீண்டும் ஓட்டு கேட்க வந்ததாக ஆவேசம் தெரிவித்தனர்.