வாக்குச்சாவடிகளில் பயோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு முறையை கொண்டு வந்து தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் எனக் கோரிய மனுவுக்கு, மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், தேர்தல்களில் ஆள்மாறாட்டம், இரட்டை ஓட்டுப்பதிவு போன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன என கூறப்பட்டுள்ளது. தற்போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கைமுறை சரிபார்ப்பு தான் நடைமுறையில் இருப்பதாகவும், பழைய புகைப்படங்கள், எழுத்துப் பிழைகள், நிகழ்நேர சரிபார்ப்பு வசதி இல்லாமை போன்ற காரணங்களால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனு சுட்டிக்காட்டுகிறது.

வாக்காளர்களின் விரல்களில் மை வைப்பது மட்டும் போதாது; ஓட்டு போடும் நேரத்தில் விரல் ரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பை பயன்படுத்தினால் ஆள்மாறாட்டம், இரட்டை ஓட்டுப்பதிவு, போலி ஓட்டுகளைத் தடுக்க முடியும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு, சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் உடனடியாக இந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என குறிப்பிட்டது. ஆனால் அடுத்த லோக்சபா அல்லது மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன், இத்தகைய முறையை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் பல மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.