மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இடைக்காலமாக ஓட்டுரிமை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்மானமாக தெரிவித்துள்ளது.

இது மாநில சட்டசபைத் தேர்தல் இரு கட்டமாக நடைபெற உள்ள சூழலில் எழுந்த விவகாரம். வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) சுமார் 91 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 34 லட்சம் பேர் 19 மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் பெயர் மீண்டும் சேர்க்க மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. தேர்தல் தேதி நெருங்கியதால் வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பட்டியல் முடக்கத் தேதியை நீட்டிக்கவும், மேல்முறையீட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க அனுமதிக்கவும் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு, நிலுவை மேல்முறையீடுகள் உள்ள நிலையில் இந்தத் தேர்தலுக்கான இடைக்கால ஓட்டுரிமை வழங்க முடியாது என கூறியது.

அதே நேரத்தில், தகுதியுள்ளவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது என நீதிமன்றம் வலியுறுத்தியது. மேற்கு வங்கத்தில் நடந்த திடீர் நீக்கங்கள் ஒருதலைப்பட்சமாகவும் அவசர கதியிலும் நடந்ததாகத் தோன்றுகிறது எனக் குறிப்பிட்டு, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் ஆட்சேபனை மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கி சட்டப்படி தகுதியுள்ளவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மனுதாரர்கள் சட்ட ரீதியான போராட்டத்தை தொடரவும் அனுமதி வழங்கப்பட்டது.