சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி (நாம் தமிழர்) ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் ஏன் ₹1,000, ₹2,000க்காக “கையேந்த” வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

தன் உரையில், நீண்ட காலமாக தன் அரசியல் அழைப்பை மக்கள் புரிந்து கொள்ளவில்லை எனக் கூறிய அவர், அதை “ஒன் சைடு லவ்” என்ற உவமையுடன் விளக்கினார். மற்றவர்கள் சொன்னால் நம்புகிறார்கள்; நான் சொன்னால் சிரிக்கிறார்கள் என்றும் அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வீட்டுக்கும் ஹெலிகாப்டர், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ தங்கம், புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரம், விரும்பிய நாட்டிற்கு தேன்நிலவு பயணம் போன்ற பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார்.

மேலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை வழங்குவதாகவும், வட இந்தியர்கள் இங்கு தேவையில்லை எனவும் கூறினார். கல்விக்கு ஏற்ற பயிற்சி, திறன் மேம்பாடு அளிப்பதாகவும் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளுக்கு “பெரிய பூட்டு” போட்டு மூடிவிட்டு, இனிமேல் மது காய்ச்சவும் விற்கவும் விடமாட்டேன்; கடைகளில் உள்ள இருப்பை மட்டும் குடித்துக்கொள்ளுங்கள், அதன் பிறகு சரக்கு வராது என்றும் அவர் கூறினார்.

உழைத்து களைத்து வருபவர்களுக்கு பனம்பால், தென்னம்பால் போன்றவற்றை வழங்குவதாகவும், அவற்றை திறந்து விடுவேன் என்றும் அவர் உரையாற்றினார்.