2021 முதல் 2025 வரை தமிழக சட்டசபையில் அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல திட்டங்கள், களத்தில் அமல்படுத்தப்படாமல் உள்ளதாக ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் காலநிலை கல்வி, கடலோர பாதுகாப்பு, மாசு கண்காணிப்பு, சீர்குலைந்த இயற்கை வளங்களை மீட்பு போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

சுற்றுச்சூழல் துறை என்ற பெயரை ‘காலநிலை மாற்றத் துறை’ என மாற்றியிருந்தாலும், செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றும், அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அமலுக்கு வராத அறிவிப்புகளில், பள்ளிகளில் இயற்கை முகாம்கள் மற்றும் போட்டிகள் மூலம் காலநிலை கல்வியறிவை இயக்கமாக முன்னெடுக்க ₹24 கோடி ஒதுக்கீடு, கடலுார் மற்றும் துாத்துக்குடி கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பைத் தடுக்க ₹10 கோடியில் ‘உயிர் கேடயங்கள்’ அமைத்தல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ராஜபாளையத்தில் சஞ்சீவி மலையை ₹5 கோடியில் மறுசீரமைத்து காடுகள் வளர்த்தல், நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக பல நீர்நிலைகளை இணைக்கும் 20 ஓடைகளை ₹16 கோடியில் சீரமைத்தல் போன்ற அறிவிப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட சுரங்கங்கள், சீர்குலைந்த நிலங்கள், மாசடைந்த நீர்நிலைகளை ₹10 கோடியில் சீரமைத்தல்; சென்னை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில் கடலுக்கு செல்லும் நெகிழி கழிவுகளைத் தடுக்க ₹1 கோடியில் மையங்கள் அமைத்தல்; மதுரை, திருச்சி, கோவை மொத்த விற்பனை அங்காடிகள் பூஜ்ஜிய கார்பன் இலக்கை அடைய ₹1.50 கோடியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளல் ஆகியவையும் அமலாக்கம் பெறவில்லை என கூறப்படுகிறது.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் வாகன மாசு உமிழ்வை தொலைவில் இருந்து கண்காணிக்கும் முறை (₹15 லட்சம்), மதுரை, திருச்சி, கடலுார், கோவை, திருநெல்வேலி நகரங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பறக்கும் படைகள் (₹2.35 கோடி), பள்ளி–கல்லூரி மாணவர்களை இணைக்கும் ‘தமிழக பசுமை கரங்கள்’ திட்டம் (₹22.35 கோடி), திடக்கழிவு குப்பைக் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு (₹4 கோடி), சென்னை–திருச்சி–கோவை–மதுரை நகரங்களில் ஒலி மாசு வரைபட ஆய்வு (₹50 லட்சம்), தமிழக ஏரிகள் தர கண்காணிப்பு திட்டம் (₹5 கோடி), நகரங்களுக்கு பசுமை தரக்குறியீடு வழங்கும் திட்டம் (₹3 கோடி), உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவ ₹10 கோடியில் நிதி அமைத்தல், கழிவுகளை பகிர்ந்து கொள்ள புதிய தளம் உருவாக்கல், மேலும் தமிழக வேளாண் பல்கலையுடன் இணைந்து மாசுகளால் பாதிக்கப்பட்ட மண் தர வரைபடம் தயாரித்தல் ஆகிய அறிவிப்புகளும் நிலுவையில் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.