ஏற்காடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பகுதியில், வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கியதாக தி.மு.க. எம்.பி. மீது குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ஏற்காடு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ரேவதிக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. மலையரசன் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் தி.மு.க. வாழப்பாடி நகர செயலர் செல்வமும் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஒவ்வொரு வீட்டிலும் ரூ.8,000 கூப்பனை வாக்காளர்களிடம் வழங்கி, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராகும் பின்னர், அந்த கூப்பனை பயன்படுத்தி ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, வீடுகளில் கூப்பன் வழங்கும் காட்சிகள் அடங்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, “போலி கூப்பன்” வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து, விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





