கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை, அக்கட்சியின் வேட்பாளர்கள் இருவரும் சந்திக்காமல் இருந்தது கோவை காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையத்தில் சூரிய பிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மதியம் கோவை விமான நிலையம் வந்தார். மாலை கோவை தெற்கு மற்றும் சூலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்து, இரவு ஈரோட்டிலும் பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் கோவையில் காங்கிரஸ் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யவில்லை.
டி.மு.க. தரப்பின் அழைப்பின் அடிப்படையில் வந்ததாலும், கோவையில் தன் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதாலும் அவர் அந்த தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை என கட்சியினர் கூறினர். இதற்கிடையில், விமான நிலையத்தில் வரவேற்பும் இல்லை; மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை ஓட்டலில் தங்கியிருந்த போதும் வேட்பாளர்கள் சந்திக்கவில்லை என நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
சிதம்பரம் புதன்கிழமையும் கோவையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் புறப்படும் முன் வேட்பாளர்கள் சந்தித்தால் சீனியர் நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையெனில் பிரச்னை நீடிக்கலாம் என்றும் உள்ளூர் தலைவர்கள் தெரிவித்தனர்.




