தேர்தலுக்கு முன்பாக திமுகவினர் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை பல பகுதிகளில் வழங்கியதாகவும், இதனால் பெறுபவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு கடைகளில் வாக்குவாதங்கள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக தேர்தல் அறிக்கையில் ‘இல்லத்தரசி திட்டம்’ என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும், அதை பயன்படுத்தி வாஷிங் மெஷின், பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருமலை சமுத்திரம் ஊராட்சியில் பெண்களிடம் கூப்பன் வழங்கப்பட்டதாக கூறப்படும் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஹல்லி கிராமத்திலும் இதேபோல் கூப்பன்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் ரேஷன் அட்டை எண், குடும்பத் தலைவி பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை உண்மையான கூப்பன் என நம்பி பெண்கள் அருகிலுள்ள கடைகளில் கொடுத்தபோது கடைக்காரர்கள் ஏற்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் முடிந்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து அரசாணை வெளியிட்டால் மட்டுமே பொருட்கள் கிடைக்கும் என அவர்களிடம் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடசென்னையின் சில பகுதிகளிலும் கூப்பன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு சென்ற அதிமுகவினர் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், திமுகவின் ரூ.8,000 கூப்பன் வினியோகம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் அளித்து, கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு உள்ளிட்ட தொகுதிகளில் பெண் வாக்காளர்களை குறிவைத்து கூப்பன்கள் வழங்கப்படுவதாகவும், பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமார் கூப்பன் வழங்கியதாக கூறப்படும் படங்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டு நடவடிக்கை கோரியுள்ளது.





