சேலத்தில் இன்று தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருவார் என்ற பேச்சு இருந்தாலும், அவர் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பொதுக்கூட்ட இடம் சேலம் கோட்டை மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கான அனுமதி பெற நேற்று தொகுதி தேர்தல் அலுவலரிடமும் சேலம் டவுன் காவல்துறையிடமும் தி.மு.க. தரப்பினர் கடிதம் அளித்து அனுமதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் தி.மு.க. மாவட்ட செயலர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாலின் தலைமையில் அண்ணா பூங்காவில் இருந்து மகளிர் பேரணி தொடங்கி பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மற்றும் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்கின்றனர்.

மேலும், பேரணி முடிவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஸ்டாலின் உரையாற்றுவார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.