புதுடில்லி: ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் சேர்ந்து உலகளவில் ரூ.3,000 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்படத் தொடரில் (franchise) இந்த அளவிலான வசூலை எட்டியது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் வெளியான முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளியை மையமாகக் கொண்ட இந்தப் படம் உலகளவில் ரூ.1,307 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் பாகம் துரந்தர்: தி ரிவெஞ்ச் என்ற பெயரில் கடந்த வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியானது. முதல் பாகம் பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலகத்தை மேலோட்டமாகத் தொட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் பல அம்சங்களை நிகழ்கால சம்பவங்களுடன் இணைத்து நேரடியாக சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
எதிர்பார்ப்பை மீறிய வரவேற்பால் மீண்டும் மீண்டும் பார்க்கும் பார்வையாளர்கள் அதிகரித்ததாகவும், அதனால் வசூல் வேகம் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டாம் பாகம் மட்டும் ரூ.1,712 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும், இரு பாகங்களின் மொத்த வசூல் ரூ.3,019 கோடியை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் இணைந்து ரூ.2,438 கோடி வரை வசூல் செய்து முன்பு சாதனை படைத்திருந்ததாகவும் அந்த தகவல் குறிப்பிடுகிறது.





