ரூ.8,000 மதிப்புள்ள “கூப்பன் மாடல்” வினியோகத்திற்கு திமுக இந்தியத் தேர்தல் கமிஷனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது; பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியது என தேர்தல் கமிஷன் கடுமையாக தெரிவித்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் ‘இல்லத்தரசி திட்டம்’ என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும், அதைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், பிரிஜ், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் மக்கள் நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் வீடு வீடாக கூப்பன்களை வழங்கி வருவதாகவும், பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் இத்தகைய கூப்பன்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கூப்பன் வினியோகத்திற்கு எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து தகராறு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, திமுகவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் ‘ரூ.8,000 கூப்பன் மாடல் வினியோகத்திற்கு தேர்தல் கமிஷனிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம்’ என பதிவிட்டு, அனுமதி கடிதம் எனக் கூறி ஒரு கடிதத்தையும் வெளியிட்டார்.
அந்த பதிவுக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மின்னணு ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாக தெளிவுபடுத்தினார். அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள்—குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள், கைப்பிரதிகள் போன்றவை—இந்த அனுமதிக்குள் வராது என்றும், அவை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் பிரிவு 127A மற்றும் மாதிரி நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.





