துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த குமாரவேல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 2021ஆம் ஆண்டு வேட்புமனுவில் தெரிவித்த சொத்து விவரங்களுக்கும், தற்போதைய வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் உள்ள விவரங்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மனுவில், 2021ஆம் ஆண்டு பிரமாணப் பத்திரத்தில் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வேட்புமனுவில் அதற்கான தகவல் இல்லை என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரது மனைவி ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த பரிவர்த்தனைகள் குறித்து உரிய விளக்கங்கள் இல்லை என்றும் மனுதாரர் தெரிவித்தார்.
மேலும், ‘ஸ்னோ ஹவுசிங்’ நிறுவனத்திற்கு 2021ஆம் ஆண்டு ரூ.11.6 கோடி கடன் கொடுத்ததாக இருந்தது, தற்போது ரூ.10 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1.6 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டதா என்ற விவரம் இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 2020க்கு முன் ரூ.2.02 கோடி வருமானம் என இருந்தது, தற்போது ரூ.10.98 கோடி என உயர்ந்துள்ளதாகவும், வருமானம் மற்றும் சொத்து அதிகரித்ததற்கான விளக்கம் போதுமானதாக இல்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.





