பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏப்.16 முதல் 18 வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்துடன் தொடர்புடைய சில திருத்தங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, லோக்சபா மொத்த இடங்களை 543-இல் இருந்து 850 ஆக உயர்த்தும் திட்டமும் உள்ளதாகவும், அதற்கான வரைவு மசோதா அனைத்து எம்பிக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நடைபெறும் காலத்தில் பார்லிமென்ட்டை கூட்டுவது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்பி டி.ஆர். பாலு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





