மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லோக்சபாவின் மொத்த இடங்களை 543லிருந்து 850 ஆக உயர்த்தும் வரைவு மசோதாவை மத்திய அரசு அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பியுள்ளது.

2023 செப்டம்பரில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின் தான் அது அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 2027ல் தான் கணக்கெடுப்பு முடிவடையும் என்பதால், 2029 தேர்தலுக்குள் அமல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

இதனை விரைவுபடுத்தும் நோக்கில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் அமல்படுத்தவும், அதற்கேற்ற சில திருத்தங்களை கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏப்.16 முதல் 18 வரை பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளது.

வரைவு முன்மொழிவின்படி, மாநிலங்களுக்கு 815 இடங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்கள் என மொத்தம் 850 இடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்; எந்த தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க புதிய தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் பிரதிநிதித்துவத்தை இழக்காமல் இருக்க விகிதாசார அடிப்படையில் இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.