மாதவரம் தொகுதியில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள், தற்போதைய எம்.எல்.ஏ. வரும்போது ஓடி ஒளிவதாக கூறப்படுவதால், தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏ. சுதர்சனம். ம.தி.மு.க.வில் இருந்து வந்த அவர், தொடர்ந்து இருமுறை வென்று, மூன்றாவது முறையாக தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். செலவுச்சிக்கனமாக செயல்படுபவர் என்ற பெயரும் கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்ளூரில் அவர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, சாலையோரங்களில் பணியில் இருக்கும் 100 நாள் திட்ட பெண்கள் மற்றும் துப்புரவு பெண் தொழிலாளர்களை சந்திப்பது வழக்கம் என கூறப்படுகிறது. காரிலிருந்து ரூ.5 ‘மேரி பிஸ்கட்’ பாக்கெட்டை கொடுத்து சாப்பிட சொல்லி, அவர்களின் குடும்பக் கஷ்டங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்னைகளை நீண்ட நேரம் கேட்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், குறைகளை சரிசெய்ய உதவி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெண்களிடையே உள்ளது. மேலும், மணிக்கணக்கில் பேசுவதால் வேலை பாதிக்கப்படும் என்பதால், அவரது கார் அந்த வழியாக வந்தால், சிலர் புதர்களுக்குள் அல்லது குளப்பகுதிக்குள் இறங்கி வேலை செய்வது போல பாவனை காட்டி, அவர் சென்ற பின் மீண்டும் வெளியே வந்து அமர்வதாகவும் கூறப்படுகிறது.
பிரசாரத்திற்காக அவர் தொகுதி பக்கம் வரும்போது, ‘மேரி பிஸ்கட் அண்ணன் வர்றாரு; ஓடுங்கடி’ என்று ஒருவருக்கொருவர் சொல்லி பெண்கள் ஒதுங்குவதாக தகவல். பிரசாரத்திற்கு உடன் வந்தால் சிறப்பு கவனிப்பு இருக்கும் என கட்சி நிர்வாகிகள் கூறினாலும், ‘அவரை பற்றி எங்களுக்கு தெரியாதா’ என்று சொல்லி பெண்கள் விலகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





