அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன், தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அன்னூர் பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
அப்போது முட்டை கோழிப் பண்ணை உரிமையாளர்கள், போர் சூழ்நிலை காரணமாக முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அன்னூர் வட்டாரத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் மக்காச்சோளம் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், அன்னூர் பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றும், இப்பகுதியிலிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு நேந்திரன் வாழை மற்றும் முட்டை ஏற்றுமதி செய்ய தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். மக்காச்சோளத்திற்கு கட்டுப்படியாகும் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியிருந்தாலும், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வழங்காததால் திட்டம் தாமதமானதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவையில் இருந்து கணேசபுரம் வரை திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை அன்னூர் வரை மேலும் 8 கி.மீ. நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட டிபன்ஸ் காரிடார் திட்டம் தமிழகத்தில் தி.மு.க. அரசு ஒத்துழைப்பு தராததால் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறிய அவர், அவிநாசியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்; சேவூரின் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.





