மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது மதப் பழக்கவழக்கங்களை கட்டாயப்படுத்தி, பாலியல் தொந்தரவு செய்ததாக வந்த புகார்களைத் தொடர்ந்து நாசிக் போலீசார் பலரை கைது செய்துள்ளனர். பணியிடத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த கைது நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிப்ரவரி மாதத்தில், அங்கு பணிபுரியும் இளம் ஹிந்து பெண் ஊழியர் ஒருவர், தன்னை இஸ்லாமிய பழக்கவழக்கங்களை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் பலருக்கும் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து, சுமார் ஒரு மாத காலம் பெண் போலீஸ் அதிகாரிகள் ஹவுஸ்கீப்பிங் ஊழியர்கள் போல ரகசியமாக அலுவலகத்துக்குள் நுழைந்து தினசரி செயல்பாடுகளை கவனித்தனர். குறிப்பாக மூத்த பதவிகளில் இருப்பவர்களை மையமாக வைத்து கண்காணித்ததில், ஆரம்ப நிலை குற்றச்சாட்டுகள் உறுதியாகத் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

மார்ச் மாதத்தில் டியோலாலி போலீஸ் நிலையத்தில் முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதில், சக ஊழியர் தானிஷ் ஷேக் தனது திருமணத்தை மறைத்து திருமணம் செய்வதாக உறுதி அளித்து உறவு வைத்ததாகவும், பின்னர் தினமும் தொழுகை செய்யச் சொல்லி மதப் பழக்கங்களை மாற்ற முயன்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தானிஷ் ஷேக் மற்றும் தௌசிப் அத்தார் கைது செய்யப்பட்டனர்; அத்தாரின் கைப்பேசியில் கிடைத்த தகவல்கள் மேலும் புகார்களுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணை விரிவடைந்த நிலையில், மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை டியோலாலி கேம்ப் மற்றும் மும்பை நாகா போலீஸ் நிலையங்களில் மொத்தம் ஒன்பது எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். பெரும்பாலான புகார்கள் 18 முதல் 25 வயது வரையிலான இளம் பெண்களிடமிருந்து வந்துள்ளன; புகார்களில் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாக கூறப்படும் கருத்துகள், தவறான தொடுதல், ஆபாசமான பேச்சு மற்றும் பணியிடத் தொந்தரவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.