மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் பி.பி.ஓ. அலுவலகத்தில் பாலியல் அத்துமீறல் மற்றும் மதமாற்ற அழுத்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் மலேஷியாவைச் சேர்ந்த ஒரு மதபோதகருடன் குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியர்கள் தொடர்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரியில், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது தொல்லை நடப்பதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, உண்மை நிலவரத்தை அறிய நாசிக் போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கினர்.
அதன் ஒரு பகுதியாக, நான்கு பெண் போலீசார் உட்பட பலர் தூய்மை பணியாளர்களாக அலுவலகத்தில் பணியில் சேர்ந்தனர். இந்த நடவடிக்கையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட டி.சி.எஸ். ஊழியர்கள் தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவைச் சேர்ந்த ‘இம்ரான்’ என்ற மதபோதகருடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டோருடன் தொடர்புடைய வாட்ஸ்அப் குழுக்களை சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. இதில் சக ஊழியர்கள் குறித்து பேசப்பட்ட சில உரையாடல்கள் நீக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ‘டீம் லீடர்கள்’ சக ஊழியர்களை முஸ்லிம் நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததாகவும், மனித வள மேலாளர் நிடா கான் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆரம்பத்தில் ஒன்பது பேர் புகார் அளித்த நிலையில், தற்போது புகாராளர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.





