குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, தனது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார்.

2019ல் மத்திய அரசு வழங்கிய தகவலின் அடிப்படையில், பிரிட்டன் போலீசார் லண்டனில் அவரை கைது செய்தனர். தற்போது அவர் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளன. ஆனால், நாடுகடத்தும் நடவடிக்கையை தடுக்க பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவர் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் மனித உரிமை மீறல் நடக்கலாம்; சித்ரவதை செய்யப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ரகசிய முறையில் நடைபெறும் என்றும், சி.பி.ஐ. தரப்பின் வாதங்களும் கேட்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த மனு நிராகரிக்கப்பட்டால், பிரிட்டனிலிருந்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான இறுதி சட்டத் தடையும் நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.