பெரம்பூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, தி.மு.க. நிர்வாகிகள் அதிகாரிகள் ஆதரவுடன் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக செவ்வாய்க்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அவரது கூறுகையில், சென்னை மாநகராட்சி 44வது வார்டு உட்பட்ட பகுதியில் ஒரு காரில் பணம் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, அப்பகுதி தி.மு.க. கவுன்சிலரின் வீட்டில் சுமார் ரூ.5 கோடி அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாக கூறினார்.
ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் தாமதமாக வந்ததோடு, சோதனையிலும் மெத்தனமாக நடந்துகொண்டதாகவும், அதே நேரத்தில் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் குவிந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிகாரிகள் வருவதை தி.மு.க.வினர் எப்படி அறிந்தனர், தகவல் தெரிவித்தும் பணம் எப்படி “மாயமானது”, சம்பவ நேரத்தில் பொறுப்பான தேர்தல் அதிகாரி இல்லாமல் ஒரு ஊழியர் மட்டும் பதில் அளித்தது ஏன் என அவர் கேள்விகளை எழுப்பினார்.
செய்தியாளர்களிடம் பேசிய திலகபாமா, வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது ஜனநாயகத்தை பாதிக்கும் என்றும், தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், அவர் வியாசர்பாடி பி.வி.நகரில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து திங்கள்கிழமை பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.





