புதுடில்லி: பெட்ரோல், டீசல் சில்லறை விலையை உயர்த்தாமல் விற்பனை செய்வதால் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் 2022 ஏப்ரல் முதல் பம்ப் விலைகளை மாற்றாமல் வைத்துள்ளன. இதற்கிடையில் ரஷ்யா–உக்ரைன் போர், அமெரிக்கா–இஸ்ரேல் போர் போன்ற காரணங்களால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற இறக்கங்களை கண்டது.

சர்வதேச நிதி சேவை நிறுவனம் ‘மெக்வாரி’ வெளியிட்ட குறிப்பில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் சந்தை அதிகமாக பாதிக்கப்படுவதால் நிறுவனங்களின் வருவாய் நிலைமை உறுதியற்றதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்ததாகவும், அதன் தாக்கம் இன்னும் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ரூ.18 மற்றும் டீசலில் லிட்டருக்கு ரூ.35 வரை இழப்பு ஏற்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலரை கடந்த போது, தினசரி ரூ.2,400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.

மத்திய அரசு கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததால் இழப்பு ஓரளவு ஈடு செய்யப்படுவதாகவும், ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் கிடைத்த லாபம் மார்ச் மாத இழப்பை சமாளிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி–மார்ச் காலாண்டில் நிறுவனங்கள் நஷ்டத்தை பதிவு செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.