கீவ்: உக்ரைனின் ஆயுதம் ஏந்திய தரைவழி ரோபோக்கள் ரஷ்ய ராணுவ நிலைகளை சூழ்ந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய வீரர்கள் குழு ஒன்று சரணடைந்ததாக வெளியாகிய தகவல்கள் உக்ரைனின் போர்க்கள தொழில்நுட்பத்தை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா 2022-ஆம் ஆண்டு போரைத் தொடங்கியது. சமீபத்தில் நடந்த மோதலில், உக்ரைன் படைகள் ஆளில்லா அமைப்புகளை பயன்படுத்தி ரஷ்ய நிலைகளுக்கு நெருக்கமாக சென்றதாக கூறப்படுகிறது.

துல்லியமான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், ரஷ்ய வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு UGV (ஆளில்லா தரைவழி வாகன) ரோபோக்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், போர் தொடங்கியதிலிருந்து முதல்முறையாக ட்ரோன்களும் தரைவழி ரோபோக்களும் மட்டுமே பயன்படுத்தி ஒரு ரஷ்ய நிலையை உக்ரைன் கைப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதள பதிவில், இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் அல்ல; தீமையை கண்டறிந்து எதிர்கொள்வதற்கான முயற்சி என்றும், தங்கள் வீரர்களின் உயிரைக் காக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு உலகளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்கால போர்களில் ரோபோக்களின் பங்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய நெறிமுறை கேள்விகள் குறித்து வல்லுநர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.