சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு விவகாரத்தை தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலரிடம் (சி.இ.ஓ.) விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முத்தம்பட்டி பகுதியில் உள்ள அந்த பள்ளியில் மார்ச் 17 அன்று கணிதத் தேர்வு நடைபெற்றதாக கூறப்படுகிறது. தேர்வு நேரத்தில் மாணவர்கள் அடிக்கடி கழிப்பறைக்கு சென்று வந்ததை கவனித்த முதன்மை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் (மேட்டுப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்) கழிப்பறையைச் சென்று பார்த்துள்ளார்.
அங்கு அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததையும், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதற்கான விடைகள் கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்ததையும் கண்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அன்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு எழுத்துப்பூர்வ புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த விவகாரம் பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு அலுவலருக்கு தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டதாகவும், தனியார் பள்ளியுடன் பேரம் பேசப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஏப். 9 அன்று வெளியான செய்திகளுக்குப் பிறகு, சேலம் மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் குப்புசாமி, மகேஸ்வரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.





