பாட்னா: பா.ஜ.க.வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி (57) இன்று பீஹார் முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் மாநிலத்தின் முதல்வர் பதவியை பாஜ முதன்முறையாக கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக இருந்த நிலையில், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனை சந்தித்து முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா கடிதம் அளித்தார்.
ராஜினாமாவுக்குப் பிறகு, துணை முதல்வராக இருந்த சாம்ராட் சவுத்ரி பாஜ சட்டமன்றக் கட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் புதிய முதல்வராக பதவியேற்றார்.
ஜே.டி.யூ தலைவர் விஜய் குமார் சவுத்ரி துணை முதல்வராக பதவியேற்றார். புதிய அரசு நிர்வாகப் பணிகளை கவனிக்கும் என்றும், தன் முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, முன்பு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) மற்றும் பின்னர் ஜே.டி.யூவில் இருந்துள்ளார். 2017ல் பாஜவில் இணைந்த அவர், 2023ல் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றார்.





