பீஹாரில் இன்று புதிய முதல்வர் பதவியேற்பு நடைபெற உள்ளது. துணை முதல்வராக உள்ள பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி (57) இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார். இதன் மூலம் பீஹாரில் பா.ஜ.க. சார்பில் முதல்வராக பொறுப்பேற்கும் முதல் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கிறது.
இதற்கு முன் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். சமீபத்தில் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கவர்னர் சையத் அட்டா ஹஸ்னைனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கவர்னர் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பின்னர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சாம்ராட் சவுத்ரி சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சமூக ஊடகத்தில் நிதிஷ் குமார், இனி பீஹாரின் நிர்வாகப் பணிகளை புதிய அரசு கவனிக்கும் என்றும், புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.





