தவெக நிலைப்பாட்டை சீமான் கேள்வி
புதுக்கோட்டை: தவெக-திமுக இடையே நேரடி போட்டி என விஜய் பேசும் நிலையில், எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் தவெக ஏன் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜ தலைமையிலான மத்திய அரசு குறைக்க முயற்சிப்பதாக கூறினார். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் லோக்சபா தொகுதிகளை நிர்ணயிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீடு வழங்குவதுக்கும் தொகுதி மறு சீரமைப்புக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பிய சீமான், பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தாலும் ஆண்களுக்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பதே ஆணாதிக்க மனநிலை என விமர்சித்தார். தொகுதிகளை அதிகரித்தால்தான் பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என்ற அணுகுமுறையையும் அவர் சாடினார்.
தவெக அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் குறிப்பிட்ட அவர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பாஜ நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு விஜய் பிரசாரத்திற்கு செல்லவில்லை என்றும், காரைக்குடி தொகுதிக்கே அவர் செல்வதாகவும் கூறினார். தன்னை காரைக்குடிக்கானவர் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்குடிக்கானவர் என்றும், நாட்டையே வெல்ல போராடுகிறேன் என்றும் சீமான் தெரிவித்தார்.





