சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஏப்ரல் 16 அன்று தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வீடுகளிலும் பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், பார்லிமென்டில் மத்திய பாஜ அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படும் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் தமிழகத்துக்கும் தென்மாநிலங்களுக்கும் “வரலாற்று அநீதி” எனவும் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையால் தென்னிந்தியர்கள் கொதித்துள்ளதாக கூறிய அவர், இது “நெருப்போடு விளையாடுவது” என விமர்சித்தார். மறுவரையறைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்; அதற்காக “மிகப் பெரிய விலை” கொடுக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.





