தமிழக சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் சட்டக்கல்வி மேம்பாட்டுக்காக சட்டசபையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளதாக, வெளியிடப்பட்ட விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக, புதிய சட்ட பட்டதாரிகளுக்கான தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கி மாதம் ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. மேலும் திருச்சி, கோவை, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் அதிகவேக இணைய வசதியுடன் வைஃபை மண்டலம் அமைப்பதும் பட்டியலில் உள்ளது.

தமிழகத்தின் 14 அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், சட்ட மாநாடுகள் நடத்துவது, மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது போன்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கான ஆசிரியர் மேம்பாட்டு திட்டம், புத்தாக்கப் பயிற்சி ஆகிய அறிவிப்புகளும் இதில் அடங்கும்.

திருச்சி, கோவை, திருநெல்வேலி, வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளில் உள் விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பது, இளங்கலை சட்டப் படிப்புகளில் தேசிய மாணவர் படை (NCC) பாடம் அறிமுகப்படுத்துவது, சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் கூடுதல் முதுநிலை பிரிவுகள் தொடங்குவது போன்ற கட்டமைப்பு மற்றும் கல்வி விரிவாக்க அறிவிப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் “சைபர் ஸ்பேஸ், சட்டம் மற்றும் நீதி” என்ற புதிய பாடப்பிரிவில் முதுநிலை சட்டப் படிப்பு தொடங்குவது, சட்ட ஆராய்ச்சி துறையை சர்வதேச அளவில் மேம்படுத்த ரூ.15 லட்சம் செலவில் திட்டம் தொடங்குவது, திருநெல்வேலி மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளில் ரூ.14 கோடியில் புதிய நூலகக் கட்டடம் அமைப்பது, சட்டப் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து பாடநூல் கழகம் மூலம் வழங்குவது, அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் சட்டத்துறை நூலகத்தில் மின் நூலகம் அமைப்பது, வணிக வழக்குகளுக்காக ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைப்பது ஆகிய அறிவிப்புகளும் இன்னும் நடைமுறைக்கு வர வேண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.