வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும், அடுத்த சுற்றுக்கான இடமாக இரண்டு நகரங்கள் கவனத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிப். 28 முதல் ஈரானை எதிர்த்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து போர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், உலக நாடுகளின் வலியுறுத்தலுக்குப் பிறகு தற்காலிகமாக இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை சுமார் 21 மணி நேரம் நீடித்தும் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அமெரிக்கா தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஈரான் தன் கோரிக்கைகளுக்கு இணங்க தயாராக இருந்தால் மீண்டும் பேச்சு தொடங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். வரும் 21ம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை நோக்கி புதிய சுற்று பேச்சு நடத்த இரு தரப்பும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இடமும் நேரமும் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், நாளையே பேச்சு நடைபெறலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல். புதிய சுற்றுக்கான சாத்தியமான இடங்களாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஆகியவை பரிசீலனையில் உள்ளதாகவும், பாகிஸ்தான் தொடர்ந்து முதன்மை மத்தியஸ்தராக செயல்படும் எனவும் கூறப்படுகிறது.