சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய தேர்தலை அதிகாரத்திற்கான “சதுரங்க வேட்டையாக” மாற்றுகிறார்களா என திமுகவை நோக்கி தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் ‘₹8,000 கூப்பன்’ நாடகத்தால் திருச்சி மண்ணச்சநல்லூரில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி நெஞ்சைப் பதற வைப்பதாக கூறினார். கூப்பன் விநியோகத்தின் போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க முடியாமல் மன உளைச்சலால் அந்த சம்பவம் நடந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய தேர்தலிலும் ₹8,000 வழங்குவதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதை பயன்படுத்தி வீட்டுத் தேவையான பொருட்களை வாங்கலாம் எனவும் திமுக கூறி வருவதாக விஜய் குற்றம்சாட்டினார். 2026 சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் இது அறிவிக்கப்பட்டதாகவும், இது தோல்வி பயத்தின் அறிகுறி எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும், மக்களை ஏமாற்றும் இத்தகைய தேர்தல் மோசடிகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தினார்.





