சென்னை: சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பார்லியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதற்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்தார்.

அதே நேரத்தில், ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த முயற்சி லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543 இலிருந்து 850 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த திருத்தம் நிறைவேறினால், தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் இடையிலான பிரதிநிதித்துவ விகித வேறுபாடு அதிகரிக்கும் என்றும், மொழி, கலாசாரம், மாநில உரிமைகள் போன்ற விடயங்களில் சட்டம் இயற்றுதல் மற்றும் மத்திய கொள்கைகள் வகுத்தலில் தென் மாநிலங்களின் குரல் குறையும் என்றும் விஜய் தெரிவித்தார்.

மேலும், தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் விகிதாசாரம் மாறுவது நிதிப் பகிர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும், மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான தமிழகத்தின் நிதி மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார். எனவே 131ஆவது திருத்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியை கைவிட்டு, தற்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்று விஜய் வலியுறுத்தினார்.