சென்னை: திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் லீமா ரோஸ், துணை முதல்வர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் கமிஷனில் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தாக்கல் செய்த மனுவில், ஏப்.11 அன்று லால்குடியில் நடந்த பிரசாரத்தில் உதயநிதி தனது அரசியல் அடையாளத்தை இழிவுபடுத்தும் வகையில் பட்டப்பெயரிட்டு பேசியதாகவும், வாக்காளர்களின் மனதில் தன்னை எதிர்மறையாக காட்டும் நோக்கில் கருத்துகள் கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தானும் தனது குடும்பத்தினரும் மறைமுக நோக்கங்களுக்காக பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தமிழகத்தில் லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்கி மக்களை சீரழிக்க எண்ணுகிறோம் எனவும் உதயநிதி கூறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தன் கணவர் மார்ட்டின் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருப்பதாகவும், கேரளம், சிக்கிம், கோவா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டப்பூர்வமாக நடைபெறுவதாகவும், அந்தந்த மாநிலங்களில் விதிமுறைகளை பின்பற்றி தான் விற்பனை நடப்பதாகவும் லீமா ரோஸ் குறிப்பிட்டுள்ளார். தன்னையும் குடும்பத்தினரையும் குறிவைத்து அவதூறான கருத்துகளை வெளியிட உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இதே போன்ற புகாரை, லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் மகனும், தே.ஜ. கூட்டணியில் உள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லசும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





