திருப்பூர்: மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட எட்டு கட்ட போராட்டங்கள் பலனளிக்கவில்லை எனக் கூறிய தமிழ்நாடு தொழில்முனைவோர் கூட்டமைப்பு, அடுத்த கட்டமாக சட்டசபை தேர்தலில் வாக்குகள் மூலம் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கடுமையான மின்கட்டண உயர்வு காரணமாக 2023–24 காலகட்டத்தில் கடும் அதிருப்தி உருவானதாக தெரிவித்தார். இதனால் குறு, சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், மாநிலம் முழுதும் 500-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தியதாகவும் கூறினார்.
உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி உள்ளிட்ட எட்டு கட்ட போராட்டங்கள் நடந்தபோதும் அரசு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றும், சந்திக்க நேரம்கூட ஒதுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அபரிமிதமான சொத்துவரி உயர்வால் கட்டட வாடகை உயர்ந்து, கடை வியாபாரிகள், குறு-சிறு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வாடகை மற்றும் மின்கட்டண உயர்வுகள் உற்பத்தி செலவை உயர்த்தி, குறுந்தொழில்கள் முடங்கும் நிலை உருவாகியுள்ளதாக கூட்டமைப்பு கூறியது. சோலார் மின்சார பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பதும் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், ஒன்பதாவது கட்டமாக சட்டசபை தேர்தலில் “ஒருவிரல் புரட்சி” நடத்தி தி.மு.க.க்கு பாடம் புகட்டும் வகையில் மாநிலம் முழுதும் ஒருங்கிணைத்து வருவதாக முத்துரத்தினம் கூறினார்; தேர்தலில் தங்களின் போராட்டம் பிரதிபலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.





