அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது துாத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.2.7 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை 2019-ல் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு துாத்துக்குடியில் விசாரணையில் உள்ளது.
இதையே அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை (ED) வழக்கு தாக்கல் செய்தது. பின்னர், சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி துாத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் ED மனு தாக்கல் செய்தது.
ஆனால், அந்த மனுவை விசாரிக்க அதிகாரம் இல்லை எனக் கூறி, துாத்துக்குடி நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ல் மனுவை நிராகரித்தது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும் ED சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு முன் வந்த இந்த மனுவில், துாத்துக்குடி நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் இடைக்கால தடை தேவை என ED தரப்பு வாதிட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வழக்கின் தற்போதைய நிலை விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து, துாத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.





