மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவுடன் இணைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் தொகுதி மறுவரையறை (டெலிமிடேஷன்) மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க ‘இண்டி’ கூட்டணி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டில்லியில் தெரிவித்தார்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தாங்கள் எதிரல்ல என கார்கே கூறினார். ஆனால் மத்திய அரசு மசோதாவை கொண்டு வரும் விதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளை முடக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் கூறினார்.
கார்கே தலைமையில் நடந்த ‘இண்டி’ கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு, ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சஹாரிகா கோஷ், சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அணியின் எம்.பி. சுப்ரியா சுலே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 50% வரை உயரலாம் என மசோதா குறிப்பிடுவதாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒரே சீராக மறுவரையறை செய்யப்படும் என அரசு கூறுவதாகவும் தெரிவித்தார். ஆனால் மாநிலங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் விதிகள் மசோதாக்களில் இல்லை; இதனால் பல மாநிலங்கள் லோக்சபாவில் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடலாம் என அவர் எச்சரித்தார்.
மேலும், மகளிர் ஒதுக்கீடு தற்போதைய லோக்சபா பலமான 543 அடிப்படையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்றும், அந்த சட்டம் 2029 லோக்சபா தேர்தலிலிருந்து அமலுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விவாதத்தின் போது மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம் என கூட்டணி தெரிவித்துள்ளது.





