மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மாநகராட்சி கூட்டத்தின் போது “வந்தே மாதரம்” பாடலை பாட மறுத்ததாக கூறப்படும் இரண்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“வந்தே மாதரம்” தொடர்பாக கடந்த பிப்ரவரியில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன் “வந்தே மாதரம்” பாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தூர் மாநகராட்சியில் ஏப்ரல் 8-ம் தேதி பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன் “வந்தே மாதரம்” இசைக்கப்பட்டது.
அப்போது காங்கிரஸ் கவுன்சிலர்கள் பவுசியா ஷேக் அலிம் மற்றும் ரூபினா இக்பால் கான் ஆகியோர் பாடலை பாட மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மத நம்பிக்கையே காரணம் என அவர்கள் தெரிவித்ததாகவும், பா.ஜ.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சமூக செயற்பாட்டாளர் விகாஸ் அவஸ்தி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தினர்.





