புதுடில்லி: மேற்காசிய போர் சூழலுடன் தொடர்புடைய பதற்றம் காரணமாக இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது முழுமையாக சீராக 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் மூத்த மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டில்லியில் அவர் கூறியதாவது: பாதிக்கப்பட்டுள்ள எல்.பி.ஜி. விநியோகஸ்தர்களுடன் பேசியபோது, விநியோகத் தொடர் அமைப்பு மீண்டும் நிலைபெற குறைந்தது 3–4 ஆண்டுகள் தேவைப்படலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். உற்பத்தி பாதிப்பு தற்காலிகமா, நிரந்தரமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இதன் விளைவாக இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் விலைகளில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கான எரிவாயு விநியோகத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து, பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளையும் ஆராய்ந்து வருகிறது.

கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்று ஏற்பாடுகள் தற்போதைய விநியோக தடைகளை சமாளிக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஒரே நாட்டை சாராமல் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, மாற்று கடல் வழித்தடங்களை பயன்படுத்துவது, உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவது மற்றும் தேவையை நிர்வகிப்பது போன்ற வழிகள் பரிசீலனையில் உள்ளன.

இந்தியாவின் எல்.பி.ஜி தேவையில் சுமார் 60% இறக்குமதியிலேயே கிடைக்கிறது. மேற்காசிய போர் முன்பு எல்.பி.ஜி இறக்குமதியின் சுமார் 90% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வந்த நிலையில், தற்போது கப்பல் கட்டுப்பாடுகள் மற்றும் வேறு இடங்களில் கொள்முதல் காரணமாக அது சுமார் 55% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.