மும்பை: சமூக வலைதளங்கள் மூலம் பழகி காதலிப்பதாக கூறி சிறுமிகளை ஏமாற்றி, சுமார் 180 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 19 வயது இளைஞரின் வீட்டின் பகுதிகளை மகாராஷ்டிர அரசு நேற்று இடித்தது.
அமராவதி மாவட்டம் பரத்வாடாவை சேர்ந்த முகமது ஆயாஸ் என்பவர், சிறுமிகளுடன் எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம், அவரை தொடர்புடையதாக கூறப்படும் ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி. ஒருவர் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஏப்.11 அன்று ஆயாஸ் கைது செய்யப்பட்டு, அவரது மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டதில் பல சிறுமிகளுடன் உள்ள ஆபாச படங்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையில், ‘ஸ்நாப்சாட்’ மற்றும் ‘வாட்ஸாப்’ குழுக்கள் மூலம் சிறுமிகளை தொடர்புகொண்டு நம்பிக்கை ஏற்படுத்தி, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிலரை பாலியல் தொழிலில் ஈடுபட மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாக தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் புல்டோசருடன் வந்து வீட்டின் படிக்கட்டுகள், ஜன்னல்கள் மற்றும் கூரை பகுதிகளை இடித்தனர்.





