அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வட சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபுவிடம் “விலை போகாதீர்” என கடுமையாக எச்சரித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட தொகுதிகளில் சில நிர்வாகிகள் தேர்தல் பணியை சரிவர செய்யவில்லை என்றும், சேகர்பாபுவுடன் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த புகார்களின் அடிப்படையில், வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி, வட்ட செயலர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை பழனிசாமி தனது இல்லத்திற்கு அழைத்து கண்டித்ததாக தகவல். துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ, சேகர்பாபு மற்றும் சில காவல் அதிகாரிகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுவை ஆதாரமாக பழனிசாமியிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்யுமாறு கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேகர்பாபுவிடம் சிலர் விலை போயுள்ளதாக கூறப்படும் நிலையில், பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும், வட சென்னையில் தோல்வி ஏற்பட்டால் அதற்கான பொறுப்பு நிர்வாகிகளுக்கே எனவும், கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும்; தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டேன் எனவும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.