புதுடில்லி: தொகுதி மறுவரையறை குறித்து வதந்திகளைப் பரப்பி குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்றும், அதைப் காரணமாக்கி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்க வேண்டாம் என்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தினார்.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பார்லிமென்டில் தாக்கல் செய்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா 12 மணி நேர விவாதம் நடைபெறும் என்றும், வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரிஜிஜூ, தொகுதி மறுவரையறை என்ற சாக்கில் வதந்திகளைப் பரப்பி குறிப்பாக தென் மாநில மக்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்த மசோதாவின் நோக்கத்தை திரித்துக் கூறக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது என குறிப்பிட்ட ரிஜிஜூ, லோக்சபாவிலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த முயற்சி தோற்கடிக்கப்படாமல் இருக்க அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.