சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக பார்லிமென்டில் இன்று கொண்டு வரப்பட உள்ள சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுதும் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வீடியோ பதிவில் பேசிய அவர், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு வஞ்சிக்கிறது என குற்றம்சாட்டினார். தென் மாநிலங்களுக்கு பெயரளவுக்கு தொகுதிகள் அதிகரிப்பதாக கூறி, தங்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக அதிகமாக தொகுதிகளை உயர்த்த முயல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை “மாபெரும் அநீதி” என குறிப்பிட்ட ஸ்டாலின், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தென் மாநிலங்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். தமிழர்களையும் தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்க பிரதமர் மோடி பார்க்கிறார் என்றும் அவர் கூறினார்.

இன்று பார்லிமென்டில் கொண்டு வரப்பட உள்ள சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். “கருப்பு சட்டம்” நிறைவேறக் கூடாது என்பதே தமிழக மக்களின் ஒரே கோரிக்கை எனவும் அவர் வலியுறுத்தினார்.